திறமையும், தகுதியும் இருந்து புறக்கணிக்கப்பட்ட இந்திய வீரர்கள்..!
டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் எதிர்பார்த்த வீரர்கள் பெயர்கள் பட்டியலில் இடம் பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா காரணமாக இந்தாண்டுக்கான டி20 உலகக்கோப்பை திட்டமிட்டபடி இந்தியா சார்பில் ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 16 ஆம் தேதி முதல் நவம்பர் 14 ஆம் தேதி வரை நடக்கவுள்ளது.
இதில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட் , இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாஹர், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்ஸர் படேல், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார், முகமது சமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இதனிடையே ஷிகர் தவான் போன்ற சீனியர் வீரரும், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகிய இளம் வீரர்களும் திறமையும், தகுதியும் இருந்து புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தோனி இருக்கும் காலமெல்லாம் இந்திய அணியின் மிகமுக்கிய சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்த குல்தீப் யாதவ் அவரின் ஓய்வுக்குப் பின் சிறப்பாக செயல்படவில்லை என கூறப்படுகிறது. துபாய் மைதானம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஏற்றதாக இருப்பதால் குல்தீப் ஒரு நல்ல தேர்வாக இருக்கலாம் என்று பலரும் கருதிய நிலையில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.
இதேபோல் டி20 தொடர் என்றாலே இந்திய அணியின் முக்கிய வீரராக தேர்வு செய்யப்படும் அனுபவ பந்துவீச்சாளரான சாஹல் இதுவரை 49 டி20 போட்டிகளில் விளையாடி அதில் 63 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆனால் சமீபகாலமாக சரியான பார்மில் இல்லாததன் காரணமாக இந்திய அணியில் இருந்து மெதுவாக ஓரங்கட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணிக்காக மூன்று விதமான தொடர்களிலும் மிகச்சிறப்பாக செயல்பட்டு பலமுறை அணிக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுத்த அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவானுக்கு இடம் கொடுக்காதது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. தவான் சமீபத்தில் நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் மிக சிறப்பாகவே விளையாடினார் என்ற போதிலும் அவர் புறக்கணிக்கப்பட்டுள்ளார்.