தண்ணீர் தொட்டிக்குள் இறங்கிய 3 பேர் மரணம் - விசாரணையில் நிகழ்ந்த திடீர் திருப்பம்

chennai poisiongasattack
By Petchi Avudaiappan Apr 16, 2022 11:31 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

சென்னை அருகே தண்ணீர் தொட்டிக்குள் இறங்கிய 3 பேர் மரணமடைந்த நிகழ்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

ஆவடியை மாநகராட்சிக்கு உட்பட்ட திருமுல்லைவாயல்  சிவசக்தி நகர் 52-வது தெருவில் பெரிய பங்களா வீட்டில் பிரேம்குமார் என்பவர் மனைவி ரதி, மகன் பிரதீப்குமார் ஆகியோருடன் வசித்து வந்தார். இவர்களை தவிர பிரேம்குமாருக்கு 2 மகள்களும் உள்ளனர். இவர்களில் ஒரு மகளுக்கு திருமணமாகி விட்டது. இன்னொரு மகள் படித்து விட்டு வேலை பார்த்து வருகிறார். பிரேம்குமார் மனைவி, மகன், மகள் ஆகியோருடன் இந்த வீட்டில் வசித்து வந்தார்.

இதனிடையே பிரேம்குமார் தனது வீட்டு காம்பவுண்டுக்குள் உள்ள காலி இடத்தில் தண்ணீர் தொட்டி ஒன்றையும் வீடு கட்டும்போது அமைத்திருந்தார். இந்த தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய முடிவு செய்த அவர் இதற்காக கூலி ஆட்களை நியமிக்காமல் நேற்று முன்தினம் இரவு தண்ணீர் தொட்டியில் இறங்கி தண்ணீரை வெளியேற்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். சுத்தம் செய்த பிறகு தண்ணீர் தொட்டியில் பிளீச்சிங் பவுடரை போட்டு அவர் மூடி வைத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து நேற்று காலை 9.30 மணி அளவில் தண்ணீர் தொட்டியில் மீண்டும் திறந்து இறங்கிய பிரேம்குமார், சிறிது நேரத்திலேயே மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை காப்பாற்றுவதற்காக மகன் பிரதீப்குமார் தண்ணீர் தொட்டியில் இறங்கினார். அவரும் வெளிவரவில்லை.இதைப் பார்த்ததும் வீட்டில் இருந்தவர்கள் பதற்றமடைந்தனர்.  

இதையடுத்து எதிர் வீட்டைச் சேர்ந்த பிரமோத்குமார் என்பவரை உதவிக்கு அழைத்த நிலையில் அவரும் உள்ளே சென்ற நிலையில் வெளிவரவில்லை. இதைத் தொடர்ந்து இன்னொரு பக்கத்து வீட்டுக்காரரான சாரநாத் என்பவர் தண்ணீர் தொட்டிக்குள் இறங்கி அவரும் வராததால்  தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

விரைந்து வந்த தீயணைப்பு படையினர் பாதுகாப்பு உபகரணங்களுடன் தண்ணீர் தொட்டிக்குள் இறங்கி 4 பேரையும் மேலே தூக்கினார்கள்.உடனடியாக ஆம்புலன்சில் அவர்களை ஏற்றி சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற நிலையில் பிரேம்குமார், அவரது மகனான பிரதீப்குமார், பக்கத்து வீட்டுக்காரர் பிரமோத்குமார் ஆகிய 3 பேரும் வி‌ஷ வாயு தாக்கியதில் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

மற்றோரு நபரான சாரநாத் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஒரே நேரத்தில் வி‌ஷ வாயு தாக்கி 3 பேர் பலியான சம்பவம் திருமுல்லைவாயல் சிவசக்திநகர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.