இந்த 3 இருமல் மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம் - WHO எச்சரிக்கை!
3 தரமற்ற இருமல் மருந்துகளான பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இருமல் மருந்துக்கு தடை
மத்தியபிரதேசம், சிந்த்வாரா மாவட்டத்தில் கலப்பட இருமல் மருந்து சாப்பிட்டு 22 குழந்தைகள் உயிரிழந்தனர். தொடர்ந்து விசாரணையில், இருமல் மருந்தில் நச்சுப்பொருட்கள் அதிகளவில் கலந்து இருப்பது கண்டறியப்பட்டது.
பின் இந்த மருந்தை தயாரித்த ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த மருந்து நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டு ஆலை மூடப்பட்டது. மேலும், அந்த நிறுவன உரிமையாளர் ரங்கநாதன் சென்னையில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் இந்தியாவின் மருந்துகள் தரநிலை கட்டுப்பாட்டு அமைப்பு இது குறித்து உலக சுகாதார அமைப்புக்கு அறிக்கை அனுப்பியது. அதில், “ இந்தியாவில் தயாராகும் 3 இருமல் மருந்துகளில் நச்சுத்தன்மை உள்ளது. நச்சுத்தன்மையுள்ள அந்த மருந்துகள் எதுவும் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படவில்லை.
WHO எச்சரிக்கை
சம்பந்தப்பட்ட மருந்துகள் உற்பத்தி உடனடியாக நிறுத்த உத்தரவிட்டுள்ளது. தயாரிப்பு அங்கீகாரங்களும் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. சம்பந்தப்பட்ட மாநில அதிகாரிகளால் நச்சுத்தன்மை உள்ள மருந்துகள் திரும்ப பெறுதல் தொடங்கப்பட்டுள்ளது” என கூறியுள்ளது.
இதனையடுத்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், “இந்தியாவில் தயாராகும் 3 தரமற்ற இருமல் மருந்துகளான ‘கோல்ட்ரிப், ரெஸ்பிப்ரெஷ் டிஆர், ரீலைப்’ ஆகியவற்றில் ஏதேனும் உங்களிடம் இருந்தால், அவற்றை பயன்படுத்த வேண்டாம். தேசிய ஒழுங்குமுறை அதிகாரிகள் சந்தையின் கண்காணிப்பு அதிகரிக்கப்பட வேண்டும்.
மேலும் அவை தங்கள் நாட்டில் கண்டறியப்பட்டால் உடனடியாக உலகெங்கிலும் உள்ள தேசிய ஒழுங்குமுறை அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும். தரமற்ற இருமல் மருந்துகளை பயன்படுத்தி ஏதேனும் பாதகமான நிகழ்வு அல்லது எதிர்பாராத பக்க விளைவை சந்தித்து இருந்தால்
, உடனடியாக சுகாதார பாதுகாப்பு நிபுணரிடம் மருத்துவ ஆலோசனை பெறவும் அல்லது விஷ கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ளவும்” என தெரிவித்துள்ளது.