திறக்கப்பட்ட முதல் நாளே சோகம் - சென்னை மெரினாவில் 3 சிறுவர்கள் மாயம்
சென்னை மெரினா கடற்கரையில் கடலில் குளித்த 3 சிறுவர்கள் மாயமான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா 2ஆம் அலை காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. இதனிடையே அடுத்த 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டித்த தமிழக அரசு கடற்கரை, தியேட்டர்கள், பூங்காக்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு இடங்களை திறக்க உத்தரவிட்டது.
அதன்படி 4 மாதங்களுக்கு பிறகு மெரினா கடற்கரையில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். வீட்டிலேயே முடங்கி கிடந்த மக்கள் பலரும் மெரினாவை நோக்கி படையெடுத்ததால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் மெரினா கடற்கரையில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற சென்னை வேளச்சேரியை சேர்ந்த 3 மாணவர்கள் அலையில் அடித்து செல்லப்பட்ட சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடலோர பாதுகாப்பு குழுமம் , தீயணைப்பு துறையை சேர்ந்த நீச்சல் பயிற்சி பெற்ற வீரர்கள்,ஹெலிகாப்டர்கள் வாயிலாக மாணவர்களை தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் கடற்கரைக்கு வந்த மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.