பியூட்டி பார்லரில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - 3 பேர் கைது

karaikudi sexuallyharassing
By Petchi Avudaiappan Nov 16, 2021 12:15 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in குற்றம்
Report

காரைக்குடியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தின்கீழ் பெண் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அரசு உதவிபெறும் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துவந்த மாணவிகள் காரைக்குடி செக்காலை ரோடு பகுதியில் செயல்பட்டு வந்த, சக மாணவியின் தாயார் பணிபுரிந்து வந்த அழகு நிலையத்திற்கு சிகை அலங்காரம் செய்ய சென்றுள்ளனர்.

அங்கு பணியில் இருந்த விக்னேஷ்வரன் மற்றும் மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கை சேர்ந்த மன்ஸில் என்ற இரண்டுபேரும் பள்ளி மாணவிகளிடம் ஆசை வார்த்தைக்கூறி பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஒரு மாணவி தனது தந்தையிடம் கூறியதையடுத்து அவர் காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  இதனடிப்படையில் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் ராஜேஸ்வரி நடத்திய விசாரணையில், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதியானது. 

இதனையடுத்து அழகு நிலையத்தில் பணியாற்றிய லட்சுமி, அவரது மகள் 17 வயது சிறுமி, பொறுப்பாளர் விக்னேஸ்வரன் ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

மேலும் தப்பியோடிய மன்ஸில் என்பவரை பிடிக்க போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே பள்ளி நிர்வாகத்திற்கு வந்த தகவலையடுத்து மாணவிகளை சரியாக கண்காணிக்க தவறியதாகக் கூறி பள்ளி நிர்வாகம் ஒரு ஆசிரியையை பணி நீக்கம் செய்தும், இரண்டு மாணவிகளுக்கு மாற்றுச் சான்றிதழ் கொடுத்தும் நடவடிக்கை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.