கேரளாவில் அதிர்ச்சி : விடுதியில் நுழைந்து பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கும்பல் - மூவர் கைது!
விடுதியில் நுழைந்து பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்தில் மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலம் வயநாட்டில், கடந்த மாதம் 20-ந் தேதி அம்பலவாயல் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பெண்கள் உள்பட 5 பேர் தங்கி இருந்தனர்.
அன்று இரவு விடுதிக்குள் முகமூடி அணிந்தபடி 9 பேர் கொண்ட கும்பல் நுழைந்துள்ளது. அப்போது விடுதியில் 2 ஊழியர்கள் மட்டுமே இருந்துள்ளனர்.
அவர்களை தாக்கிய அந்த கும்பல், விடுதி அறையில் தங்கியிருந்த பெண்களை சரமாரியாக தாக்கி விட்டு ஒரு பெண்ணை மட்டும் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடி உள்ளது.
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் வயநாடு போலீசில் புகார் செய்ததன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணை தாக்கி பாலியல் பலாத்காரம் செய்த கும்பலை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்த தேடுதல் வேட்டையில் 4 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் 5 பேர் தலைமறைவாகி விட்டனர். இந்நிலையில், தனிப்படை போலீசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் நேற்று மேலும் 3 பேர் சிக்கி உள்ளனர்.
குற்ற சம்பவத்தில் ஈடுப்பட்டுவிட்டு பெருவன்னாமுழியில் பதுங்கியிருந்த கொயிலாண்டியை சேர்ந்த முகமது ஆஷிக் (வயது 30), ரயீஸ் (31), லெனின் (35) ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்களை சம்பவம் நடந்த உல்லாச விடுதிக்கு அழைத்து சென்று ஆதாரங்களை திரட்டினர்.
இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் மேலும் 2 பேரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.