கள்ளக்காதலை கண்டித்ததால் தாய் மற்றும் தங்கை வெட்டிக்கொலை...இருவர் கைது...
மதுரை அருகே கள்ளக்காதலை கண்டித்ததால் தாய் மற்றும் தங்கையை கள்ளக்காதலுடன் சேர்ந்து பெண் ஒருவர் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள பதினெட்டான்குடி கிராமத்தை சேர்ந்த நீலாதேவி(47) மற்றும் அவரது இளைய மகள் அகிலாண்டேஸ்வரி(22) ஆகிய இருவரும் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தனர்.
இதுதொடர்பாக மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித் குமார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து மேலூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ரகுபதிராஜா தலைமையில் காவல்துறை ஆய்வாளர் சார்லஸ் உள்ளிட்ட காவல்துறையினர் அடுத்தக்கட்ட விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் ஏற்கனவே திருமணமான மகேஸ்வரி கீழவளவைச் சேர்ந்த சசிக்குமாருடன் தகாத உறவில் இருந்ததால், இரு தினங்களுக்கு முன்பு தாய் நீலாதேவி மற்றும் மகேஸ்வரியின் தங்கை அகிலாண்டேஸ்வரி ஆகிய இருவரும் கண்டித்துள்ளனர்.
இதனால் கோபமடைந்த மகேஸ்வரி அவரது கள்ளக்காதலன் சசிகுமார் உடன் சேர்ந்து நள்ளிரவில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த நீலாதேவி மற்றும் அவரது மகள் அகிலாண்டேஸ்வரி ஆகிய இருவரையும் ஆட்களை வைத்து கொலை செய்தது தெரிய வந்தது.
இதனையடுத்து மகேஸ்வரி மற்றும் சசிகுமார் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.