நீடிக்கும் போர் பதற்றம் : ரஷ்யா-உக்ரைன் இடையே இன்று 2-ம் கட்ட பேச்சுவார்த்தை
கடந்த 24-ந் தேதி ரஷ்ய படைகள் உக்ரைன் நாட்டின் மீது தாக்குதல் நடத்த தொடங்கி இன்று வரையும் இரு நாடுகளுக்கு இடையே போர் நீடித்து வருகிறது.
உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த மோதலில் இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில், தொடர்ந்து அங்குள்ள முக்கிய நகரங்களில் பதற்றமான சூழல் காணப்படுகிறது.

இதனிடையே, உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு கண்டனம் தெரிவித்து ஐ.நா.பொதுச் சபையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு,
ரஷ்யாவும், உக்ரைனும் அமைதியான வழிமுறைகள் மூலம் தீர்வு காண வேண்டும் என தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், மீண்டும் பேச்சு வார்த்தைகளை தொடங்க தங்கள் நாடு தயாராக இருப்பதாக உக்ரைன் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ தெரிவித்துள்ளார்.
போலந்தின் எல்லையில் இருக்கும் பெலாரஸில் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் குழுவினர் இன்று வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக ரஷ்ய குழுவின் தலைவர் விளாடிமிர் மெடின்ஸ்கி செய்தியாளர்களிடம் கூறினார்.
இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே இரண்டாவது சுற்று பேச்சு வார்த்தை இன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே ரஷ்யா உக்ரைன் இடையே நடத்தப்பட்ட முதல் சுற்று பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.