கரூரில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை
கரூரில் உள்ள பழனி முருகன் நகைக்கடையில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சீல் வைத்த இடங்களில் மீண்டும் ரெய்டு
கரூர் மாவட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த மே 26 முதல் ஜூன் 2-ம் தேதி வரை 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை 8 நாட்கள் நடைபெற்றது.
இந்த சோதனையின் போது சில இடங்களுக்கு சீல் வைக்கப்பட்டன. இந்நிலையில், கரூர் ஈரோடு சாலையில் கோதை நகர் அபார்ட்மெண்டில் உள்ள கார்த்திக், ரமேஷ் ஆகியோரது வீடுகள், காமராஜபுரம் பொறியாளர் பாஸ்கர், வையாபுரி நகர் 4வது குறுக்குத் தெருவில் உள்ள ஆடிட்டர் சந்திரசேகர் அலுவலகங்கள், ஒப்பந்ததாரர் எம்.சி.சங்கர், காளிபாளையம் பெரியசாமி ஆகியோர் வீடுகளில் வைக்கப்பட்டிருந்த சீலை அகற்றி வருமான வரித்துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.
2வது நாளாக இன்றும் சோதனை
மேலும் நேற்று மாலை 6.50 மணிக்கு கரூர் ஜவஹர் பஜாரில் உள்ள பழனி முருகன் நகைக்கடையில் வருமான வரித்துறையினர் மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் துணையுடன் சோதனை மேற்கொண்டனர்.
நள்ளிரவு வரை சோதனை நீடித்த நிலையில் அதன் பிறகு சோதனையை முடித்துக் கொண்டு வருமான வரித்துறையினர் புறப்பட்டனர்.
இந்நிலையில் இன்று (ஜூன் 24ம் தேதி) காலை 9.20 மணிக்கு கரூர் ஜவஹர் பஜார் பழனி முருகன் ஜூவல்லரியில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் மத்திய பாதுகாப்பு படையினர் துணையுடன் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.