26 ஆண்டுக்கு பிறகு நண்பருக்கு திருமண பத்திரிக்கை அனுப்பிய நபர் - தட்டி தூக்கிய போலீஸ்
நண்பருக்கு அனுப்பிய திருமண பத்திரிகை மூலம் 26 ஆண்டுகால குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
மனைவி மீது சந்தேகம்
ஆந்திர மாநிலம், குடிபண்டா மண்டலம் திண்ணேஹட்டி கிராமத்தைச் சேர்ந்த கொல்ல திப்பேசுவாமி 30 வருடங்களுக்கு முன், கரியம்மா என்பவரை திருமணம் செய்துள்ளார்.
இந்த தம்பதிக்கு இரு மகன்கள் உண்டு. இதில் பிறந்து 6 மாதமே ஆன இளைய மகன் சிவலிங்கய்யா, தனக்கு பிறக்கவில்லை என மனைவி மீது சந்தேகமடைந்து 6 மாத குழந்தையை கொல்ல திட்டமிட்டுள்ளார்.
குழந்தை கொலை
கடந்த 1998 ஆம் ஆண்டு மனைவி மற்றும் 6 மாத குழந்தையுடன் தசரா விழாவில் கலந்து கொள்ள ஒரு கோயிலுக்கு திப்பேசுவாமி சென்றிருந்தார். மனைவி கோயிலை சுற்றிக் கொண்டிருந்த சமயத்தில் 6 மாத குழந்தையை புதருக்கு தூக்கிச் சென்று கொலை செய்து விட்டு திப்பேசுவாமி தப்பி ஓடிவிட்டார்.
தனது கணவர் மற்றும் குழந்தையை காணவில்லை என அவரது மனைவி அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், குழந்தையை கொலை செய்து விட்டு திப்பேசுவாமி தப்பி ஓடிவிட்டார் என கண்டுபிடித்துள்ளனர்.
மகள் திருமணம்
அன்று முதல் தலைமறைவான திப்பேசுவாமி, கர்நாடக மாநிலம் ஹசானா மாவட்டத்தில் உள்ள அர்துரு கிராமத்திற்கு சென்று தனது பெயரை கிருஷ்ண கவுடா என்று மாற்றியுள்ளார். மேலும் அங்கு தாரா என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு துளசி, சௌமியா என்ற இரு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் 4 மாதங்களுக்கு முன் தனது சொந்த ஊரில் உள்ள நாகராஜு என்ற 26 ஆண்டுகால நண்பரை தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அப்போது திப்பேசுவாமியின் முதல் மனைவி கரியம்மா பெங்களூரு சென்றுவிட்டதாகவும் அப்பா மற்றும் சித்தப்பாவிற்கு வயதாகி விட்டதாகவும் நாகராஜு தெரிவித்துள்ளார். மேலும், சொந்த நிலத்திற்கு தீர்வு காணுமாறும் தெறிவித்துள்ளார்.
இதனையடுத்து தனது 2வது மனைவி மூலம் பிறந்த மகள் சௌமியாவின் திருமணத்திற்கு வருமாறு நாகராஜுக்கு திருமண அழைப்பிதழ் அனுப்பியுள்ளார். நாகராஜூவும் அவரது மனைவியும் இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டது கிராம மக்களுக்கு தெரியவந்தது.
கைது
தகவலறிந்த காவல்துறையினர், தனிப்படை அமைத்து திப்பேசுவாமியை கைது செய்ய திட்டமிட்டனர். நாகராஜுவிடம் நடத்திய விசாரணையில் திருமண பத்திரிகையை கைப்பற்றியுள்ளனர். மேலும் நில விவகாரம் தொடர்பாக திப்பேசுவாமி அடிக்கடி சொந்த ஊருக்கு வந்து செல்வதும் விசாரணையில் தெரிய வந்தது.
கடந்த திங்கட்கிழமை(25.11.2024) திப்பேசுவாமி விவகாரம் தொடர்பாக மீண்டும் சொந்த ஊருக்கு வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. திங்கட்கிழமை பேருந்து நிலையத்தில் காத்திருந்த காவல்துறையினர் திப்பேசுவாமி பேருந்தில் வந்து இறங்கியதும் கைது செய்தனர். 26 வருடங்களுக்கு பிறகு குற்றவாளியை கைது செய்த தனிப்படை காவல்துறையினரை மாவட்ட எஸ்.பி ரத்னா பாராட்டியுள்ளார்.