பிரதமர் மோடியின் கல்வி சான்றிதழை கேட்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அபராதம்
பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழ்களை வெளியிட கோரிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.25,000 அபராதம் விதித்துள்ளது.
பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழ்களை, பிரதமர் அலுவலகம் வழங்க தேவையில்லை என கூறி இதுகுறித்து வழக்கு தொடர்ந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.25,000 அபராதம் விதித்தது குஜராத் உயர்நீதிமன்றம்.
பிரதமர் பட்டம்
கடந்த 2016-ஆம் ஆண்டில், தகவல் அறியும் உரிமை (ஆர்டிஐ) கோரிக்கைக்கு பதிலளித்த மத்திய தகவல் ஆணையம், பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு மற்றும் முதுகலை பட்டங்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு பிரதமர் அலுவலகம் (பிஎம்ஓ), குஜராத் பல்கலைக்கழகம் மற்றும் டெல்லி பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு உத்தரவிட்டது.

வழக்கு
இந்த உத்தரவை எதிர்த்து குஜராத் பல்கலைக்கழகம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. பிரதமர் மோடியின் தேர்தல் ஆவணங்களில், குஜராத் பல்கலைக்கழகத்தில் 1978-இல் பட்டம் பெற்றதாகவும், 1983-இல் டெல்லி பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றதாகவும் கூறுகின்றன. கடந்த மாதம், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா விசாரணையின் போது, இந்தத் தகவலை வெளியிடுமாறு பல்கலைக்கழகத்தை நிர்ப்பந்திக்கக் கூடாது என்று வாதிட்டார்.
ஜனநாயகத்தில், பதவியில் இருப்பவர் முனைவர் பட்டம் பெற்றவராகவோ அல்லது படிப்பறிவில்லாதவராகவோ இருந்தால் வித்தியாசம் இருக்காது. மேலும், இந்த விவகாரத்தில் பொதுமக்கள் நலன் எதுவும் இல்லை. யாரோ ஒருவரின் குழந்தைத்தனமான மற்றும் பொறுப்பற்ற ஆர்வத்தைத் திருப்திப்படுத்த தகவலை வழங்குமாறு எங்களைக் கேட்க முடியாது என்றார்.
இந்த நிலையில், பட்டப்படிப்பு சான்றிதழைகளை பிரதமர் அலுவலகம் அளிக்க வேண்டும் என தலைமை தகவல் ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த தனி நீதிபதி, சான்றிதழ்களை வெளியிட கோரிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.