மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 எப்போது ?அப்டேட் கொடுத்த நிதியமைச்சர்.!
மகளிருக்கு மாதம் ரூ.2,500 உரிமைத்தொகை எப்போது வழங்கப்படும் என்பது குறித்த முறையான அறிவிப்பு, தமிழக அரசின் வரவிருக்கும் முதல் முழுமையான நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்படும் என்று நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்திற்கு வருகை தந்த நிதியமைச்சர் மரிய வில்சன் பிரத்தனையை முடித்துவிட்டு, செய்தியாளர்களைச் சந்தித்து வழங்கிய பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் பேசிய அமைச்சர், ஆண்டுதோறும் வேளாங்கண்ணி திருத்தலத்திற்கு வருவது வழக்கமாக இருந்தாலும், இந்த ஆண்டு மிகவும் விசேஷமானதாக இருப்பதாக தெரிவித்தார்.
விரைவில் திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதால், ஆரோக்கிய அன்னையின் அருளைப் பெற வந்ததாகவும், தமிழகத்தின் நிதிநிலை குறித்து இரண்டு வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்றும், அதில் எந்தவித மறைவு இல்லாமல் மக்களுக்கு முழு விவரமும் தெரிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், மதுரை மாநகராட்சியில் நடைபெற்றதாக கூறப்படும் ஊழல் தொடர்பாக முழு அறிக்கை கேட்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து தணிக்கை அறிக்கைகளும் பரிசீலனையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், மகளிர் உரிமைத்தொகை வழங்கலில் ஏற்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், பிற மாநில பெண்களுக்கும் தொகை வழங்கப்பட்டதாக வரும் தகவல்கள் குறித்து தீவிர ஆய்வு நடைபெறுவதாகவும், ரூ.2500 உரிமைத்தொகை வரவிருக்கும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.