ஷவர்மா சாப்பிட்ட மாணவி உயிரிழந்ததன் எதிரொலி : நாகையில் 250 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்
கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், கேரளாவில் ஷவர்மாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் அதிகாரிகள் இறைச்சி கடைகளில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் ஷவர்மா போன்ற உணவுகள் தயாரிக்கப்படும் இடங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் நாகப்பட்டினத்தில் இன்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஷவர்மா விற்பனை செய்யும் கடைகள் மற்றும் இறைச்சி கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது வெளிப்பாளையம் வண்டிபேட்டை பகுதியில் மொத்தமாக விற்பனை செய்யும் சிக்கன் இறைச்சிக்கடை குடோனில் இருந்து கெட்டுப்போன சுமார் 250 கிலோ சிக்கன் இறைச்சியை பறிமுதல் செய்தனர்.
பின்னர் இறைச்சிக்கடையின் உரிமையாளர் சேக் தாவுதை எச்சரித்த மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், இது போன்று மீண்டும் கெட்டுப்போன இறைச்சிகளை விற்பனை செய்தால், கடைக்கு சீல் வைக்கப்படும் எனவும் அவர்கள் எச்சரித்து சென்றனர்.