மாமியார், மருமகள் கை, கால்களை கட்டிப் போட்டு 25 பவுன் நகைகளை கொள்ளையடித்த கும்பல் - பரபரப்பு சம்பவம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வெள்ளையூர் கிராமத்தில் வசித்து வருபவர் அப்துல் ரஹீம். இவருடைய மனைவி பல்கிஸ்பீவி.
இந்நிலையில், பல்கிஸபீவியும், அவரது மருமகள் ஷேக்கா ஆகிய இருவரும் நேற்று மதியம் வீட்டில் தனியாக சமையல் செய்து கொண்டிருந்தனர்.
அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த முகமூடி அணிந்த 3 கொள்ளையர்கள் தனியாக சமைத்துக் கொண்டிருந்ததை நோட்டமிட்டனர். திடீரென கொள்ளையர்கள் வீட்டின் முன்புற கதவின் வழியாகவும், பின்புற கதவின் வழியாகவும் உள்ளே நுழைந்துள்ளனர்.
உள்ளே நுழைந்தவர்கள் கதவை உள்பக்கம் தாழிட்டு சமைத்துக் கொண்டிருந்த பெண்களின் கழுத்தில் கத்தியை வைத்து அவர்கள் அணிந்திருந்த நகைகளை கழட்டித் தருமாறு மிரட்டி அதட்டியுள்ளனர். ஆனால், இரண்டு பேரும் மறுக்கவே, பல்கீஸ்பீவியை கட்டிப்போட்டு ஒரு அறைக்குள் தள்ளி கதவை கொள்ளையர்கள் மூடியுள்ளனர்.
இதைப் பார்த்து தப்பியோட முயன்ற ஷேக்காவை எட்டி உதைத்து கீழே தள்ளிய கொள்ளையர்கள், ஷேக்காவின் கை மற்றும் கால்களை கட்டிப் போட்டுவிட்டு பீரோவிலிருந்த 25 பவுன் நகைகளை கொள்ளையடித்து விட்டு 3 பேரும் தங்களது இருசக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் தப்பி ஓடியுள்ளனர்.
வீட்டிற்குள் வந்த அப்துல் ரஹீம், ஷேக்காவும், பல்கீஸ்பீவியும் கை மற்றும் கால்கள் கட்டிப் போடப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக உளுந்தூர்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பட்டப்பகலில் வீட்டில் சமைத்துக் கொண்டிருந்த பெண்களை கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி கை கால்களை கட்டி கொள்ளையடித்து சென்ற சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.