பேருந்து கவிழ்ந்த விபத்தில் 25 பேர் உயிரிழப்பு - குடியரசு தலைவர் இரங்கல்
உத்தரகாண்ட் மாநிலத்தில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்திற்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார்.
பேருந்து கவிழ்ந்து விபத்து
உத்தகாண்ட் மாநிலம் லால்தாங் பகுதியில் இருந்து பவுரி கர்வால் மாவட்டத்தில் உள்ள பிரோன்கால் பகுதிககு நேற்று பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
அப்பேருந்தில் பிரோன்காலில் நடைபெறும் திருமண விழாவில் பங்கேற்பதற்காக 50க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர்.
இந்த நிலையில் பேருந்து மலைப்பாங்கான பகுதியில் நேற்று இரவு 7.30 மணியளவில் பேருந்து சென்று கொண்டிருந்த போது சிம்ரி என்ற இடத்தில் உள்ள வளைவில் திரும்பும் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர். மேலும் பள்ளத்தாக்கில் இருந்து 21 பேரை மீட்புப்படையினர் மீட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
குடியரசு தலைவர் இரங்கல்
இந்தநிலையில் உத்தரகாண்ட் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பதிவில், உத்தரகாண்ட் மாநிலம் பவுரி கர்வாலில் பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் பலர் உயரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் தங்கள் உறவினர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.