தமிழக மீனவர்கள் 23 பேரை விடுதலை - இலங்கை நீதிமன்றம் உத்தரவு

Fishermen Released Tamilnadu
By Thahir Nov 16, 2021 12:18 AM GMT
Report

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட நாகை மாவட்ட மீனவர்கள் 23 பேரை விடுதலை செய்து இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை கைது செய்வதும், விரட்டியடிப்பதையும் இலங்கை கடற்படை தொடர்ந்து செய்து வருகிறது.

அதுபோல, அக்டோபர் 13-ஆம் தேதி கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையை சேர்ந்த மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக இந்திய அரசு இலங்கை அரசுடன் பேசியது.

இதைத்தொடர்ந்து, தமிழக மீனவர்கள் மீதான நீடிக்கப்பட்ட காவல் முடிவடைந்ததை அடுத்து, மூன்றாவது முறையாக பருத்தித்துறை நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்ட மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு தலா ரூ.1000 அபராதம் விதித்து விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.