தவறான தகவல் பரப்பியதால் 22 யூடியூப் சேனல்கள் முடக்கம் : மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் நடவடிக்கை
தேசிய பாதுகாப்பு குறித்து தவறான தகவல் பரப்புவதாக 22 யூடியூப் சேனல்களை முடக்கியுள்ளதாக மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தேசிய பாதுகாப்பு, வெளியுறவுத்துறை சார்ந்த தொடர்புகள் மற்றும் பொது ஒழுங்கு குறித்து தவறான தகவல் பரப்புவதாக கூறி 22 யூடியூப் சேனல்களை முடக்கியுள்ளதாக மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
அதன்படி, 18 இந்திய யூடியூப் சேனல்கள், பாகிஸ்தானை சேர்ந்த 4 யூடியூப் சேனல்கள், 3 ட்விட்டர் கணக்குகள், ஒரு ஃபேஸ்புக் கணக்கு மற்றும் ஒரு செய்தி இணையதளமும் முடக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “இந்திய ஆயுதப் படைகள், ஜம்மு & காஷ்மீர் போன்ற பல்வேறு விஷயங்களில் உண்மை தன்மையற்ற செய்திகளை பதிவிட பல யூடியூப் சேனல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
தற்போது தடைசெய்யப்பட்டுள்ள உள்ளடக்கத்தில், பாகிஸ்தானில் இருந்து ஒருங்கிணைந்த முறையில் இயக்கப்படும் பல சமூக ஊடக கணக்குகளில் இந்தியாவுக்கு எதிராக வெளியிடப்பட்ட சில செய்திகளும் அடங்கும்.” என தெரிவித்துள்ளது.
மேலும், “இந்த இந்திய யூடியூப் சேனல்கள், தற்போது உக்ரைனில் நிலவும் சூழ்நிலை குறித்தும், பிற நாடுகளுடனான இந்தியாவின் வெளிநாட்டு உறவுகளை ஆபத்தில் ஆழ்த்துவதை நோக்கமாகக் கொண்டது” எனவும் தெரிவித்திருக்கிறது.