22 ஆண்டுகள் கடந்தும் மீளாத துயர்! தாமிரபரணி படுகொலை! அப்பாவி தொழிலாளர்களின் அடங்காத அலறல்கள்!
நெல்லையில், ஊதிய உயர்வுகேட்டு நடந்த பேரணியில், போலிசார் தடியடிக்கு பயந்து ஆற்றில் விழுந்து உயிரை விட்ட 17 அப்பாவித் தொழிலாளர்களின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதனையொட்டி தாமிரபரணி ஆற்றில் பல்வேறு அமைப்பினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணைக்கு மேல், மேற்குத்தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை தேயிலைத் தோட்டம் அமைந்துள்ளது. இங்கு பணியாற்றும் ஊழியர்கள் கடந்த 1999ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி கூலி உயர்வு கேட்டு நெல்லை சந்திப்பு பகுதியில் இருந்து பேரணியாக வந்தனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று ஊதிய உயர்வு தொடர்பாக மனு கொடுப்பதாகத் திட்டம் இருந்தது. ஆனால், ஆட்சியர் அலுவலகத்தை நெருங்கிய போது பேரணியாக சென்ற மக்களின் பிரதிநிதிகளை உள்ளே விட மறுத்தது காவல்துறை. இதன் விளைவாக, வாக்குவாதம் ஏற்பட்டு, இறுதியில் காவல்துறை தடியடி நடத்தத் தொடங்கியது.
பாரபட்சமற்ற அடி. கோரிக்கை கோஷம் போட்ட குரல்கள், வலிதாங்க முடியாமல் வாய்விட்டு அலறிக்கொண்டிருந்தனர். இந்தப்பக்கம் ஆட்சியர் அலுவலக சுற்றுச்சுவர், அந்தப்பக்கம் தாமிரபரணி ஆறு. இந்த அடிக்கு பயந்து தப்பிக்க முயற்சித்த பலருக்கும் ஒரே வழியாக இருந்தது தாமிரபரணி ஆறுதான்.
வேறு வழியில்லை, எப்படியேனும், ஆற்றை கடந்துவிட்டால், தடியடியிலிருந்து தப்பி உயிர்பிழைக்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர் பேரணி கும்பல்.
கூட்டமாக ஆற்றில் விழுந்து தப்பிக்க முயற்சித்த அப்பாவிகளில் 17 பேர், எதிர்பாராதவிதமாக ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த 17 பேரில் போலீசார் அடிக்கு பயந்து ஒன்றரை வயது குழந்தையும் பலியாகியுள்ள நிகழ்வுதான் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவர்களின் நினைவு தினம் ஆண்டு தோறும் அனுசரிக்கப்பட்டு வருவது வழக்கம். அந்த வகையில் 22ஆவது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இவர்களது
நினைவாக அவர்களது குடும்பத்தை சேர்ந்தவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.