உக்ரைனில் சிக்கி தவித்த 219 இந்தியர்கள் இந்தியா வந்தனர் - கண்ணீர்மல்க வரவேற்ற குடும்பத்தினர்

ukraine airindia UkraineRussiaWar
By Petchi Avudaiappan Feb 26, 2022 05:05 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

உக்ரைனில் போர் நடந்து வரும் நிலையில் அங்கு சிக்கி தவித்த 219 இந்தியர்களுடன் புறப்பட்ட முதல் விமானம் இந்தியா வந்தடைந்தது.

உக்ரைன் தற்போது நேட்டோ கூட்டமைப்புடன் சேர்வதற்கான அனைத்து பணிகளையும் செய்து வருகிறது. இதனால் தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என கூறி ரஷ்யா உக்ரைன் மீது 3வது நாளாக போர் தொடுத்து வருகிறது.

வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலில் ஏராளமான பாதுகாப்பு படை வீரர்கள், பொதுமக்கள் பலியாகியுள்ளனர். உக்ரைனும் தங்கள் நாட்டைக் காக்க பதிலடி கொடுத்து வருவதால் அங்கு உச்சக்கட்ட பதற்றம் நிலவுகிறது. 

இதற்கிடையில் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது. உக்ரைன் தனது வான் எல்லைகளை மூடியதால் அண்டை நாடுகள் வழியாக இந்தியர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 

அந்த வகையில் உக்ரைன்-ருமேனியா எல்லைக்கு சாலை மார்க்கமாக வந்தடைந்த இந்தியர்கள் ருமேனியாவில் உள்ள புகாரெஸ்ட் நகரத்திற்கு அதிகாரிகளால் அழைத்து வரப்பட்டனர். அதேசமயம்  இந்தியர்களை மீட்டு கொண்டு வருவதற்காக ஏர் இந்தியா சிறப்பு விமானங்களையும் இயக்கி வருகிறது.

அதன்படி இன்று அதிகாலை 3.40 மணிக்கு ஏர் இந்தியா விமானம்  மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு காலை காலை 10 மணியளவில் புகாரெஸ்ட் நகரத்தில் தரையிறங்கியது. சாலை மார்க்கமாக அழைத்து வரப்பட்ட 219 இந்தியர்கள் ஏற்றிக்கொண்டு ஏர் இந்தியா விமானம் இரவு 8 மணியளவில் மும்பை விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியுள்ளது. 

உக்ரைனில் இருந்து வந்த இந்தியர்களை அவர்களது குடும்பத்தினர் கண்ணீர்மல்க வரவேற்றனர்.