21 பேரின் உயிர்களை காவு வாங்கிய கள்ளச்சாராயம் - முதல்வர் பதவி விலக கோரிக்கை
விஷ சாராயம் குடித்த 21 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.
கள்ளச்சாராய விவகாரம்
பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. பகவந்த் சிங் மான் முதல்வராக உள்ளார். இங்கு அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள பங்கலி, படல்புரி, மராரி கலான், தெரேவால், தல்வண்டி குமான் ஆகிய
ஐந்து கிராமங்களில், கள்ளச்சாராயம் குடித்த 21 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். மேலும், 10க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
21 பேர் பலி
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், ஐந்து கிராமங்களுக்கும் நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்தனர். அதில், முக்கிய குற்றவாளியான பிரப்ஜித் சிங் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். 50 லிட்டர் மெத்தனாலை ஆன்லைனில் வாங்கி அதில் மற்ற பொருட்களை கலந்து 120 லிட்டராக மாற்றி உள்ளூர் சாராய வியாபாரிகளுக்கு விற்பனை செய்துள்ளது தெரியவந்தது.
தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக, அமிர்தசரசின் மஜிதா பகுதி டி.எஸ்.பி., அமோலக் சிங், இன்ஸ் பெக்டர் அவ்தார் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், விஷ சாராய விற்பனையை தடுக்க தவறிய ஆம் ஆத்மி அரசின் முதல்வர், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.