தீபாவளிக்கு 20,378 சிறப்பு பேருந்துகள்; எப்போது முதல்? எங்கே இருந்து இயங்கும்? - அமைச்சர் அறிவிப்பு
தீபாவளிக்கான சிறப்பு பேருந்துகள் குறித்த அறிவிப்பை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வெளியிட்டுள்ளார்.
தீபாவளி சிறப்பு பேருந்துகள்
தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 20 ஆம் தேதி நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.
கல்வி, வேலை நிமித்தம் காரணமாக சென்னை போன்ற ஊர்களில் வசித்து வரும் மக்கள் தீபாவளியை கொண்டாட சொந்த ஊருக்கு வருகை தருவார்கள்.
இந்நிலையில், சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
எப்போது முதல்?
இது குறித்து பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், "தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வரும் அக்டோபர் 16 ஆம் தேதி முதல் அக்டோபர் 19 வரையில், சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன் 5,710 சிறப்புப் பேருந்துகள் என 4 நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக 14,268 பேருந்துகள் இயக்கப்பட்ட உள்ளது.
மேலும், பிற ஊர்களில் இருந்து இந்த 4 நாட்களுக்கு 6,110 சிறப்பு பேருந்துகள் என ஆக மொத்தம் 20,378 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அதேபோல், தீபாவளியை கொண்டாடி முடித்து விட்டு, பொதுமக்கள் ஊர் திரும்புவதற்கு வசதியாக அக்டோபர் 21 முதல் 23 வரை பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு தினம் தோறும் இயக்கப்படும் 2092 பேருந்துகளுடன் கூடுதலாக 4253 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
பிற ஊர்களிலிருந்து 4600 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மொத்தம் 15,129 சிறப்பு பேருந்துகள் தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர் இயக்கப்பட உள்ளன.
எங்கே இருந்து இயங்கும்?
புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, செங்கோட்டை, கன்னியாகுமரி, சேலம், கோயம்புத்தூர், கும்பகோணம், தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து இயக்கப்படும்.
வந்தவாசி, போளூர், திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் மாநகர பேருந்து முனையத்திலிருந்து இயக்கப்படும்.
காஞ்சிபுரம், வேலூர், பெங்களூர், திருத்தணி மார்க்கமாக செல்லும் பேருந்துகள், கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக இயக்கப்படும்.
திருச்சி, சேலம், கும்பகோணம், திருவண்ணாமலை தட பேருந்துகளுடன், பொன்னேரி, ஊத்துகோட்டை வழியாக ஆந்திர மாநிலம் மார்க்கமாக செல்லும் பேருந்துகளும், மாதவரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.
தொடர்பு எண்கள்
இதற்காக கிளாம்பாக்கத்தில் 10 முன் பதிவு மையங்களும், கோயம்பேட்டில் 2 முன் பதிவு மையங்களும் தொடங்கப்பட்டு, முன்பதிவு நடைபெற்று வருகிறது. தற்போது வரை 2 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்ளவும், புகார் தெரிவிப்பதற்கும் ஏதுவாக, 94450 14436 என்ற 24 மணி நேர தொடர்பு எண்அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் தொடர்பாக புகார் அளிக்க 1800 425 6151 என்ற இலவச எண் மற்றும் 044-24749002, 044-26280445, 044-26281611 ஆகிய தொடர்பு எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.