வெளியானது 2022 உலகக்கோப்பை அட்டவணை - எங்கே, எப்போது மேட்ச் தெரியுமா?
2022 ஆம் ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி எந்த மைதானங்களில் நடைபெறும் என்பதற்கான விவரத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி வெளியிட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற 2021 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரை ஆஸ்திரேலிய அணி முதல்முறையாக கைப்பற்றி அசத்தியது. இந்த தொடர் முடிந்து 2 நாட்களே ஆன நிலையில் 2022 ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்கான பணிகளை ஐசிசி தொடங்கியுள்ளது.
8வது டி20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. இந்த தொடர் அக்டோபர் 16 ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் இறுதிப் போட்டி நவம்பர் 13 ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடர் ஆஸ்திரேலியாவின் ஏழு நகரங்களில் நடைபெறவுள்ளது. அடிலெய்டு, பிரிஸ்பேன், ஜீலாங், ஹோபர்ட், மெல்போர்ன், பெர்த் மற்றும் சிட்னி ஆகிய இடங்களில் மொத்தம் 45 போட்டிகள் நடைபெறவுள்ளன. போட்டியின் முதல் அரையிறுதி நவம்பர் 9 ஆம் தேதி சிட்னியிலும், இரண்டாவது அரையிறுதி நவம்பர் 10 ஆம் தேதி அடிலெய்டிலும் நடைபெறும்.
இறுதிப்போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. அதே நேரத்தில், போட்டியின் முழு அட்டவணை அடுத்த ஆண்டு ஜனவரியில் அறிவிக்கப்படும்.
2022 டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-12 சுற்றுக்கு எட்டு அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. மற்ற நான்கு அணிகளும் முதல் சுற்றுக்குப் பிறகு தகுதி பெறும். சாம்பியன் ஆஸ்திரேலியா மற்றும் ரன்னர்-அப் நியூசிலாந்து தவிர, இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் தரவரிசை அடிப்படையில் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
இலங்கை, மேற்கிந்திய தீவுகள் ஆகியவை நமீபியா மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுடனும் மேலும் நான்கு அணிகளுடனும் தகுதிச் சுற்றில் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.