நாட்டையே பரபரப்பாக்கிய ஹைதராபாத் என்கவுண்டர் போலியானது ; 10 போலீசார் மீது கொலை வழக்கு பதிய உச்ச நீதிமன்றத்தில் பரிந்துரை!
நாட்டையே உலுக்கிய ஹைதராபாத் என்கவுன்ட்டர் போலியானது என்று உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு தெலங்கானா மாநிலம் ஷம்சாபாத் சுங்கச் சாவடி அருகே 27 வயது கால்நடை பெண் மருத்துவர், லாரி ஓட்டுநர் உள்பட நான்கு பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார்.
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த கொடூரக் கொலையில் ஈடுப்பட்ட லாரி ஓட்டுநர் உள்ளிட்ட நான்கு பேரை தெலங்கானா போலீசார் விரைந்து செயல்பட்டு கைது செய்தனர்.
குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என நாடு முழுவதும் போராட்டம் வலுத்த நிலையில், இந்த வழக்கில் விரைவாக நீதி கிடைக்கும் வகையில், சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், வழக்கு விசாரணைக்காக குற்றவாளிகள் 4 பேரையும் குற்றம் நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்றபோது, அவர்கள் தப்பி ஓட முயன்றதால் 4 பேரையும் போலீஸார் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றனர்.
இந்த சம்பவம் நடந்து 3 வருடங்கள் ஆன நிலையில் தற்போது இந்த என்கவுண்டர் வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. குற்றவாளிகள் நான்கு பேரை என்கவுண்டர் செய்து சுட்டுக்கொன்ற விவகாரத்தின் உண்மைத்தன்மையை ஆராய உச்ச நீதிமன்றம் அமைத்த நீதி விசாரணை ஆணையம் தற்போது அதிர்ச்சியூட்டும் அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
அதன்படி அந்த அறிக்கையில் கடந்த 2019-ம் ஆண்டு இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில் போலீசார் நடத்திய என்கவுண்டர் போலியானது என்றும் கொல்லப்பட்ட நால்வரில் மூவர் மைனர் என்பதால் 10 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றத்தில் பரிந்துரைத்துள்ளது.