செய்யாத குற்றத்திற்கு சித்ரவதை - மனித உரிமைகள் ஆணையம் அதிரடி உத்தரவு
மதுரையில் கடந்த 2011ம் ஆண்டு, ஆர்.எஸ்.எஸ்.அலுவலகத்தில் பசுவின் தலையை மர்ம நபர்கள் சிலர் வீசிவிட்டு சென்றிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதிகாலையில் சுமார் 4.30 மணியளவில் பிளாஸ்டிக் பையில் பசுவின் தலை வீசப்பட்டிருந்ததை அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் பார்த்துவிட்டு போலீசாருக்கு தகவல் அளித்திருந்தார்.
இது தொடர்பாக எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து மூன்று குழுக்கள் அமைத்து குற்றவாளிகளை தேடிவந்தனர்.
இந்த வழக்கில் குற்றவாளிகள் என்று சாகுல் ஹமீது, அல்ஹஜ், ரபீக் ராஜா,ஷாயின்ஷா ஆகியோரை போலீசார் கைது செய்திருந்த நிலையில் மூவரும் தங்களை துணை போலீஸ் கமிஷனர் தலைமையிலான சிறப்புப்படையினர் கைது செய்து குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி சித்ரவதை செய்ததாக கூறி அதிர்ச்சியளித்தனர்.
மேலும், சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் இதுகுறித்து மனு ஒன்றையும் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி துரை ஜெயச்சந்திரன், 'சாட்சியம் மற்றும் ஆவணங்களை வைத்து பார்க்கும் போது மனுதாரர்களுக்கு எதிராக போலீசார் மனித உரிமை மீறலில் ஈடுபட்டது தெரிகிறது.
எனவே, மனுதாரர்களுக்கு தமிழக அரசு தலா ரூ.1 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும். மனுதாரரில் ஒருவரான சாகுல் அமீது இறந்து போனதால் அவருக்கான இழப்பீடு தொகையை அவரது தாயார், மகனிடம் வழங்க வேண்டும்.
மேலும், மனுதாரர்களால் குற்றம்சாட்டப்பட்டுள்ள சப்-இன்ஸ்பெக்டர்கள் பார்த்திபன், வெங்கட்ராமன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் கணேசன், மோகன், ஏட்டு சங்கரநாராயணன், போலீஸ்காரர் சித்திரவேல் ஆகியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று உத்தரவிட்டுள்ளார்.