மசாஜின் போது கழுத்தை முறுக்கியதால் விபரீதம் - 20 வயது பாடகி உயிரிழப்பு
மசாஜ் செய்த போது கழுத்தை முறுக்கியதால் பாடகி உயிரிழந்துள்ளார்.
பாப் பாடகி
தாய்லாந்து நாட்டை சேர்ந்த, 20 வயதான சாயாதா பிரோ-ஹோம்(Chayada Prao-hom) அங்குள்ள பிரபல பாப் பாடகி ஆவார்.
கழுத்து மற்றும் தோள்பட்டையில் ஏற்பட்ட வலியை சரிசெய்ய மசாஜ் எடுத்துள்ளார். அப்போது மஜாஜ் செய்பவர் அவரது கழுத்தை முறுக்கியதில், வீக்கம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
உயிரிழப்பு
கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி காலை 6 மணியளவில் உடோன் தானியில் உள்ள மருத்துவமனையில் அவரச சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. அவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன், அக்டோபர் மாதம் முதல் 3 மசாஜ் அமர்வுகள் பற்றிய விவரங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டார்.
முதல் இரண்டு மஜாஜ் அமர்வின் போது, மசாஜ் செய்பவர் அவருடைய கழுத்தை திருப்பியதாகவும், மூன்றாவது அமர்வின் போது, "கனமான கை" சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார். இதன் காரணமாக அவரது உடலில் ஒரு வாரத்திற்கு வீக்கம் மற்றும் காயங்கள் ஏற்பட்டன.
"என் விரல் நுனியில் மின்சாரம் தாக்கியது போன்ற உணர்வு உள்ளது. மசாஜ் செய்வதை விரும்புபவர்களுக்கு இதை ஒரு பாடமாக விட்டுவிட விரும்புகிறேன். நான் மீண்டு வருவேன். தற்போது மிகவும் வேதனையில் இருக்கிறேன். இப்போது வேலை செய்ய விரும்புகிறேன், ஆனால் சரியான நேரத்திற்காக காத்திருக்கிறேன்" என தனது கடைசி வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
பிரேதப் பரிசோதனை
இது குறித்து பேசிய தாய்லாந்தை சேர்ந்த மருத்துவர், மசாஜ் செய்பவர் உங்கள் கழுத்தைத் திருப்ப அனுமதிக்காதீர்கள், ஏனெனில் அது ஆபத்தானது. கழுத்தில் கரோடிட் தமனி உள்ளது, இது மூளைக்கு ஆக்ஸிஜனேற்றப்பட்ட இரத்தத்தை வழங்குகிறது. அனுபவம் வாய்ந்த மசாஜ் செய்பவர் வாடிக்கையாளரின் கழுத்தை முறுக்கமாட்டார் என தெரிவித்துள்ளார்.
மரணத்திற்கான சரியான காரணத்தைக் கண்டறிய பிரேதப் பரிசோதனை நடத்தப்படும் என மாகாண சுகாதாரத் தலைவர் தெரிவித்துள்ளார். சாயாதா சிகிச்சை பெற்ற பார்லரில் இருந்த 7 மசாஜ் செய்பவர்களும் உரிமம் பெற்றவர்கள். மேலும், மசாஜ்கள் பாரம்பரிய தாய் மசாஜ் நடைமுறைகளை கடைபிடிக்கின்றனவா என்பதை கண்டறிய விசாரணை நடந்து வருகிறது என தெரிவித்துள்ளார்.