மாணவருக்கு ராகிங் டார்ச்சர்; 20 பேர் கொடூர தாக்குதல் - படுகாயமடைந்த பரிதாபம்!
20 மாணவர்கள் சேர்ந்து ஒரு மாணவரை ராகிங் செய்து கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொடூர தாக்குதல்
கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் புள்ளல்லூரை சேர்ந்தவர் முகமது மிதுலாஜ். இவர் சாத்தமங்கலம் பகுதியில் உள்ள ஒரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். வழக்கம் போல் முகமது மிதுலாஜ் கல்லூரிக்கு சென்றிருக்கிறார்.
அப்போது அதே கல்லூரியில் படிக்கும் 20 மாணவர்கள் மிதுலாஜை அவர் அணிந்திருந்த உடை மற்றும் சிகை அலங்காரத்தை குறிப்பிட்டு கேலி செய்து ரேகிங்கில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அவர்கள் சொல்வதை செய்யும்படி மிதுலாஜிடம் கூறியிருக்கின்றனர்.
ஆனால் அவர் அதை செய்ய மறுத்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த 20 மாணவர்கள் மிதுலாஜை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் முகமது மிதுலாஜுக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து காயமடைந்த மாணவர் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தந்தை புகார்
இந்நிலையில் இதுகுறித்து முகமது மிதுலாஜின் தந்தை குன்னமங்களம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் "எனது மகனை 20 மாணவர்கள் சேர்ந்து ராகிங் செய்து கொடூரமாக தாக்கியுள்ளனர். இதனால் எனது மகனுக்கு கண் மற்றும் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.
மூக்கில் எலும்பு சேதவும் ஏற்பட்டுள்ளது. எனது மகனை ராகிங் செய்து கொடூரமாக தாக்கிய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.