புயலில் காணாமல் போன 21 மீனவர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு
டவ் தே புயலில் காணாமல் போன 21 மீனவர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரண உதவி வழங்க இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார் .
கடந்த மாதம் 13 ஆம் தேதி, டவ் தே புயலின் போது அரபிக்கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 21 மீனவர்கள் காணாமல் போனதாக தகவல் பெறப்பட்டது.
நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் துணை பெயர் கொண்ட படகு, இலட்சத்தீவு அருகே கடலில் மூழ்கியதாகவும் அதிலிருந்த 9 மீனவர் காணாமல் போய் விட்டதாகவும் தகவல் பெறப்பட்டது
இவர்களை மீட்க இந்திய கடலோர காவற்படையின் கப்பல் "விக்ரம்" மற்றும் ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டு தேடுதல் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மீனவர்களை மீட்கக் கோரி தமிழக முதலமைச்சர், மத்திய அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சருக்கு கடிதம் மூலம் கேட்டுக்கொண்டார்.
டவ் தே' புயல் காரணமாக காணாமல் போன 21 மீனவர்களும் மீன்பிடி தொழிலையே வாழ்வாதாரமாக கொண்டவர்கள் என்பதால் அவர்கள் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணத் தொகை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தர விட்டுள்ளார்.