ரீல்ஸ் மோகம்: குளத்தில் தீ வைத்து டைவ் அடித்து விபரித சாகசம் - இருவர் கைது!
குளத்தில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விபரீத சாகச வீடியோ வெளியிட்ட இரு இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.
விபரீத சாகசம்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள வாலத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் என்ற ரஞ்சித் பாலா (23). இவர் பல்வேறு சாகசங்களை செய்து, அதனை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் அவர் வைரவன் தருவை குளத்தில் நண்பர்களுடன் சேர்ந்து பெட்ரோலை ஊற்றி தீவைத்துள்ளனர். பின்னர் மளமளவென தீ எரியும் போது, அதில் ரஞ்சித் பாலா குதித்து சாகசம் செய்துள்ளார்.
இருவர் கைது
இந்த விபரீத சாகச வீடியோ சமூக வளைதளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்திய தட்டார்மடம் போலீசார், ரஞ்சித் பாலா மற்றும் அவரது நண்பர்களான சிவக்குமார், இசக்கிராஜா ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
பின்னர் ரஞ்சித் பாலா மற்றும் சிவக்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும், தலைமறைவான இசக்கிராஜாவை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.