நொடிப்பொழுதில் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த குழந்தை...அதிகாரிகளின் அலட்சியத்தால் விபரீதம்
சோளிங்கரில் நகராட்சி அதிகாரிகள் அலட்சியத்தின் காரணமாக மூடப்படாத கழிவுநீர் கால்வாயில் குழந்தை விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியின் ஆறாவது வார்டின் ஒத்தவாடை தெரு பகுதியில் நகராட்சி சார்பில் கால்வாய்களை தூர்வாரும் பணி கடந்த இரு வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்தப் பணிகள் முழுமையாக முடிந்த பின்பும் அதிகாரிகள் கழிவுநீர் கால்வாயை மூடாமல் அலட்சியமாக அப்படியே திறந்தபடி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த விவேக் என்பவர் தனது 2 வயது பெண் குழந்தையான மித்ராவிற்கு உடல்நலக்குறைவின் காரணமாக சோளிங்கரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற வைத்து மீண்டும் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது இவர் வீட்டின் இரு புறமும் கால்வாய்கள் திறந்த நிலையில் இருந்துள்ளது.
விவேக் வீட்டின் முன் வண்டியை நிறுத்தும் போது எதிரே ஒரு தாயும் மகனும் வந்துள்ளார்கள். அவர்களை பார்த்தபடி குழந்தை மித்ரா வீட்டை நோக்கி வர கால்வாய் அருகே சென்றுள்ளார். இதை கவனித்த விவேக் அவளை எச்சரித்து பிடிப்பதற்குள் அந்த குழந்தை கண்ணிமைக்கும் நேரத்தில் கழிவுநீர் கால்வாயில் விழுந்து விட்டது. உடனே விவேக்கும் கால்வாயில் குதித்து தனது குழந்தையை காப்பாற்றினார்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்த நிலையில் கழிவுநீரை குடித்திருந்ததால் குழந்தையும், கால்வாயில் குதித்து காப்பாற்றியதால் காயமடைந்த விவேக்கையும் மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நகராட்சி அதிகாரிகள் அலட்சியத்தின் காரணமாக இது போன்ற விபத்துகள் அடிக்கடி நடப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.