தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்த இருவருக்கு புதிய கொரோனா? - பெங்களூருவில் பரபரப்பு
பெங்களூரு வந்த தென்னாப்பிரிக்க நாட்டை சேர்ந்த 2 பேருக்கு புதிய கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக பெரும் இழப்புகளை ஏற்படுத்தியுள்ள கொரோனா பாதிப்பை இன்னும் எந்த நாட்டினாலும் முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வர இயலவில்லை. ஆனால் தடுப்பூசி ஒன்றே தற்காலிக தீர்வு என்பதால் அதனை செலுத்த அனைத்து நாடுகளும் தீவிரம் காட்டி வருகின்றன.
ஆனால் கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால் இதைக் கட்டுப்படுத்துவது சவாலான விஷயமாக மாறியுள்ளது. இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்னர் தென்னாப்பிரிக்காவில் புதிய உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
ஓமைக்ரான் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கொரோனா வகையை உலக சுகாதார அமைப்பு கவலைக்குரிய கொரோனா வகையாகப் பட்டியலிட்டுள்ளது. இதனால் உலகின் பல நாடுகள் தென்னாப்பிரிக்கா உடனான விமான போக்குவரத்துக்குப் பல கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளன.
இந்தச் சூழ்நிலையில், விமானம் மூலம் பெங்களூரு வந்த தென்னாப்பிரிக்க நாட்டை சேர்ந்த 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர்கள் புதிய உருமாறிய ஓமைக்ரான் கொரோனா வகையால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதைக் கண்டறிய அவர்கள் மாதிரிகள் மரபணு வரிசைப்படுத்துதல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் இருவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த முடிவுகள் கிடைக்க 48 மணிநேரம் வரை ஆகும். அதன் பின்னரே அவர்கள் ஓமைக்ரான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதை
உறுதியாக கூற முடியும் என மருத்துவ வட்டாரம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் இந்திய மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.