2 மகன்கள் கைவிட்டதால், இருட்டு வீட்டில் மண்ணை சாப்பிட்டு உயிர் வாழ்ந்த தாய் - கண்ணீர் வரவழைக்கும் சம்பவம்
ஒரு வீட்டில், எலும்பும் தோலுமாக ஆடையின்றி ஒரு மூதாட்டி மண்ணை உண்பது போன்ற வீடியோ சமூகவளைதலங்களில் வைரலாக பரவியது.
இந்த காட்சி குறித்து 1098 உதவி மையத்திற்கு சமூக ஆர்வலர்கள் புகார் கொடுத்தனர்.
இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், அந்த மூதாட்டி தஞ்சாவூர், காவிரி நகரைச் சேர்ந்த ஞானஜோதி (62) என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, அங்கு சமூக நலத்துறையினரும், போலீசார் விரைந்து சென்றனர். அங்கு சென்ற சமூக நலத்துறையினர் ஞானஜோதியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து, அக்கம், பக்கத்தினரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் இது குறித்து அக்கம், பக்கத்தினர் தெரிவிக்கையில் -
ஞானஜோதிக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். மூத்தமகன் சென்னையில் காவல் ஆய்வாளராகவும், இளைய மகன் பொதிகை தொலைக்காட்சியிலும் பணிபுரிந்து வருகின்றனர். கணவரும், தனது மகளும் 10 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டதால், ஞானஜோதியை 2 மகன்களும் கவனிக்காமல் கைவிட்டுவிட்டனர். 2 மகன்களும் சொத்து பிரச்சினை காரணமாக தனிதனியே வாழ்ந்து வருகின்றனர்.
இதனால், மகன்கள், மனநலம் பாதிக்கப்பட்ட தாயை வீட்டில் வைத்து பூட்டி இருக்கின்றனர். கடந்த 10 வருடமாக இந்த பாட்டி இப்படி தான் இருக்கிறார். வாரத்திற்கு ஒரு முறை அவரது மகன்கள் வந்து பிஸ்கட் வாங்கி கேட் வழியாக தூக்கி வீசி விட்டு சென்றுவிடுவார்கள்.
இது குறித்து நாங்கள் கேட்டால் எங்களிடம் சண்டைக்கு வருவார்கள். எங்கள் தெருவில் இருப்பவர்கள் அந்த பாட்டிக்கு அவ்வப்போது உணவு வழங்கி வருகிறோம். சில நேரத்தில் அந்த பாட்டி தண்ணீர், உணவு எதுவும் சாப்பிடாமல் மண்ணை சாப்பிடுவார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது தொடர்பான வீடியோ மாவட்ட ஆட்சியருக்கு சென்றது. உடனடியாக அந்த மூதாட்டியை மீட்டு முதலுதவி வழங்க அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும், அந்த 2 மகன்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து காவல்துறை உதவியுடன் வந்த சமூக நலத்துறையினர் வீட்டின் பூட்டை உடைத்து மூதாட்டியை மீட்டு தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அப்போது அங்கு வந்த மூத்த மகன் சொத்தையும், பென்ஷன் பணம் 30,000 ரூபாயும் தம்பி எடுத்து கொண்டதாகவும், வேதனை தெரிவித்தாரே தவிர தனது தாயை பற்றி அவர் கொஞ்சம் கவலைப்படவில்லை என்பது வேதனையின் உச்சமாக உள்ளது.