சொந்த வீட்டில் நகை திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது
உடுமலை அருகே சொந்த வீட்டிலேயே திருடி நாடகமாடிய இருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடுமலை அருகேயுள்ள தேவனூர்புதுார் எம்ஜிஆர் காலனியை சேர்ந்த கந்தராசு என்பவர் தேங்காய் வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனது மனைவி லோகேஸ்வரியுடன் வசித்து வருகிறார்.
இதனிடையே கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி சினிமாவுக்கு குடும்பத்துடன் சென்று விட்டதாகவும், அடையாளம் தெரியாத நபர், 11 பவுன் தங்க நகைகளை திருடிச்சென்று விட்டதாகவும், நேற்று பீரோவை திறந்து பார்த்த போது திருட்டு போனது தெரிந்ததாக, தளி போலீசில் கந்தராசு புகார் கொடுத்தார்.
இதனடிப்படையில் விசாரணை நடத்திய தளி போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் கந்தராசு மனைவி லோகேஸ்வரி, அவரது தம்பி அரவிந்த் குமார் ஆகிய இருவரும் திட்டம் போட்டி திருடியது தெரிய வந்தது.
திருட்டு நடைபெற்ற வீட்டில் கதவு உடைப்பு, பீரோ உடைப்பு போன்ற சம்பவங்கள் நிகழாததால் குடும்ப நபர்களே இச்சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது.
இதில் குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக லோகேஸ்வரி தனது தம்பியை வைத்து திருடியதை ஒப்புக்கொண்டார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.