குழந்தை மரணத்தில் திடீர் திருப்பம் - தாய்ப்பால் குடிக்காததால் விளக்கெண்ணெய் கொடுத்த விபரீதம்

trichy babydiet
By Petchi Avudaiappan Jan 07, 2022 11:59 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in குற்றம்
Report

திருச்சியில் பச்சிளம் குழந்தை இறந்த விவகாரத்தில் குழந்தைக்கு விளக்கெண்ணெய் கொடுத்ததே காரணம் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

திருச்சி மாவட்டம் முசிறி தாலுக்கா அய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் – சாந்தி தம்பதியினருக்கு ஏற்கனவே ஒன்றரை வயதில் ஆண் குழந்தை இருந்த நிலையில் இரண்டாவதாக கடந்த அக்டோபர் மாதம் பெண் குழந்தை பிறந்துள்ளது.

 பிரசவம் முடிந்த நிலையில் சாந்தி முத்தையநல்லூரில் உள்ள தன் தாய் வீட்டில் இருந்துள்ளார். குழந்தை சரிவர தாய்ப்பால் குடிக்காத காரணத்தால் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து குழந்தைக்கு இரண்டு சொட்டு விளக்கெண்ணெய் கொடுத்துள்ளனர். அடுத்த சில நாள்களில் குழந்தைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து குழந்தையை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் திருச்சி பெரிய ஆஸ்பத்திரிக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். அரசு மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டது. 40 நாள் தொடர் சிகிச்சை அளித்தும் குழந்தை பரிதாபமாக டிசம்பர் 30 ஆம் தேதி உயிரிழந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக ஜம்புநாதபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஐ.ஜி பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்கள் தவறான சிகிச்சை முறைகளை தாங்களே கையாள்வதும் உடல்நலம் குன்றி மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு வரும் முதியவர்கள் , பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு பொதுமக்களும் உரிய கல்வித்தகுதி இல்லாமல், முறையான பயிற்சி பெறாமல் தவறான சிகிச்சை அளிப்பதும் சட்டப்படி குற்றமாகும்.

உரிய அங்கீகாரம் இல்லாமால் தவறான மருத்துவ சிகிச்சை அளித்து அதன்காரணமாக நோயாளிகள் உயிர் இழக்க நேரிட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறைதண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.