2 சிறுமிகள்..15 பேர் பாலியல் வன்கொடுமை; பதறவைக்கும் சம்பவம் - நீதிமன்றம் விதித்த அதிரடி தீர்ப்பு!
2 சிறுமிகளை 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பாலியல் வன்கொடுமை
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ள பிரம்மதேசம் கிராமத்தில் வசித்து வந்தவர் கோமதி. இவருக்கு ஒன்பது வயதிலும், ஏழு வயதிலும் இரு மகள்கள் உள்ளனர். இவர் புதுச்சேரியில் கூலிவேலை செய்து வந்துள்ளார்.
இதனால் தன்னுடைய இரண்டு மகள்களையும் பாட்டியின் கண்காணிப்பில் வளர்த்து வந்திருக்கிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பிரம்மதேசம் காவல் நிலையத்திற்கு கோமதி புகார் அளித்திருந்தார்.
அதில், புகாரில் தன்னுடைய இரண்டு மகள்களை அதே கிராமத்தைச் சேர்ந்த 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. அந்த சம்பவத்தில் இளைஞர்கள் முதல் 70 வயது கொண்ட முதியவர் வரை இருந்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அதிரடி தீர்ப்பு
15 பேரையும் காவல்துறை கைது செய்தது. விழுப்புரம் போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்தது. ஜாமீனில் 15 பேரும் வெளியே இருந்த நிலையில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது.இந்த நிலையில், 15 பேருக்கும் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த போக்சோ நீதிமன்ற நீதிபதி வினோதா, 15 குற்றவாளிகளுக்கு மொத்தம் மூன்று பிரிவுகளின் கீழ் 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டதோடு, தலா 32 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்களும் நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்தனர். சிறை தண்டனை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கிருந்த கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர் 15 பேரும் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.