ஓடும் ரயிலில் மோதிக்கொண்ட கல்லூரி மாணவர்கள் - கலவர பூமியான சென்னை
சென்னை புறநகர் ரயிலில் இரு வெவ்வேறு கல்லூரி மாணவர்கள் மோதிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் ஓராண்டுக்கு மேல் திறக்கப்படாமல் இருந்த நிலையில், நேற்று 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிகளும் கல்லூரிகளும் திறக்கப்பட்டன.
கூட்டத்தை கட்டுப்படுத்த சுழற்சி முறையில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. கல்லூரிகள் திறந்த முதல் நாளே இரு வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் மோதிக் கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சுமார் 50 மாணவர்கள் ரயிலில் செல்வதற்காக காத்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது, அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர், அங்கிருந்த ரயில்வே போலீசார் அவர்களை எச்சரித்து ரயிலில் அனுப்பி வைத்துள்ளனர்.
இதையடுத்து மாணவர்கள் ரயிலில் ஏறிய நிலையில், கத்திக் கொண்டே பயணித்துள்ளனர். ஒரு கட்டத்தில் இவர்களுக்கிடையே மோதல் அதிகரிக்க, ரயிலின் செயினை இழுத்து நிறுத்தி கீழே இறங்கி மீண்டும் சண்டைப்போட ஆரம்பித்துள்ளனர்.
உடனே அங்கு சென்ற ரயில்வே காவல்துறை மற்றும் பாதுகாப்பு படையினர் மாணவர்களை எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.