கண்மூடி திறப்பதற்குள் பிரிந்த மகன் உயிர்... தந்தை கண்முன்னே நினைத்து கூட பார்க்க முடியாத கோரம்!
உத்தரப் பிரதேசத்தில் கடந்த 2 நாள்களில் காட்டு விலங்குகள் தாக்கி 2 குழந்தைகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப் பிரதேசம்
உத்தரப் பிரதேச மாநிலம், கங்காபேஹர் கிராமத்தைச் சேர்ந்த முனாவ்வர் என்பவர், தனது 12 வயது மகன் சஜேப்புடன் கடந்த சனிக்கிழமை (அக். 5) மாலையில் கரும்புத் தோட்டத்தின் வழியே வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்குள்ள கரும்புத் தோட்டத்தில் மறைந்திருந்த சிறுத்தை ஒன்று, முனாவ்வரை தாக்கியது. இதனையடுத்து சஜேப்பை தோட்டத்துக்குள் இழுத்துச் சென்றது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த முனாவ்வர் நடந்த சம்பவத்தைக் கிராம மக்களிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து கிராம மக்கள் சஜேப்பை தேடும் பணியில் பலரும் ஈடுபட்டிருந்தனர். அப்போது கரும்புத் தோட்டத்திலிருந்துசஜேப் சடலமாக மீட்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து வன அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
2 குழந்தைகள் பலி
உடனடியாக கிராமத்திற்கு வந்த வன அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சிறுவனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக குர்தைஹா கிராமத்திலும் வெள்ளிக்கிழமையில் ஒரு வீட்டுக்குள் நுழைந்த காட்டு விலங்கு 3 வயது பெண் குழந்தையை இழுத்துச் சென்றுள்ளது. சனிக்கிழமை (அக். 5) காலையில் காக்ரா ஆற்றில், குழந்தையின் சடலம் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.