நிம்மதியா புத்தாண்டுக்கு கேக் கூட வெட்டக் கூடாதா? பட்டியலின மக்களை தரக்குறைவாக பேசிய இருவர் கைது
புதுக்கோட்டை மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாடிய பட்டியலின இளைஞரை சாதிப் பெயரை சொல்லி திட்டிய இருவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குடிநீர் தொட்டியில் மலம் கலப்பு விவகாரம்
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் தீண்டாமை வன்கொடுமையின் உச்சகட்டமாக அங்குள்ள கோயிலில் பட்டியலின மக்கள் வழிபடுவதற்கு தடை விதித்தும், அவர்கள் குடிக்கும் குடிநீரில் மனித கழிவுகள் கலக்கப்பட்டிருந்ததும் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியது.
இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்ட மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, காவல் கண்காணிப்பாளர் வந்திதாபாண்டே ஆகியோர் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். ஐந்து பேர் மீது வழக்குகள் பதிவு செய்து இருவரை கைது செய்தனர்.
அதையடுத்து இயல்பு நிலைக்கு திரும்பிய அந்த ஊரில் அமைச்சர் மெய்யநாதன் உள்ளிட்டவர்கள் நேரடியாக சென்று மக்களிடம் பேசி, சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டு அனைவரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
ஒருவழியாக அந்த பிரச்சினை முடிவுக்கு வந்திருக்கும் நிலையில் அந்த மாவட்டத்தின் தொடையூர் கிராமத்தில் மேலும் ஒரு சம்பவம் நடந்து மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
புத்தாண்டு கொண்டாட்டம் 2 பேர் கைது
புதுக்கோட்டை மாவட்டம் பொம்மாடிமலை அருகே தொடையூரை சேர்ந்தவர் பைரவவிஷ்ணு. இவர் புத்தாண்டை முன்னிட்டு அப்பகுதியில் கேக் வைத்து வெட்டி கொண்டாடியிருக்கிறார்.
அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அதே ஊரைச் சேர்ந்த கமலஹாசன் (27 ), சரத் (30) ஆகிய இருவரும் கேக் வெட்டிய பைரவவிஷ்ணுவை சாதி பெயரை சொல்லி இழிவாக பேசி தகராறு செய்ததாக கூறப்படுகிறது இதனையடுத்து பைரவவிஷ்ணு வெள்ளனூர் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் கொடுத்தார்.
அதன் அடிப்படையில் கமல்ஹாசன், சரத் ஆகிய இருவர் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார் இருவரையும் கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.