'39 தோட்டா மீதம் இருக்கு' - ஆசிரியரை துப்பாக்கியால் சுட்டு வீடியோ வெளியிட்ட மாணவர்கள்!
ஆசிரியரை துப்பாக்கியால் சுட்டு மாணவர்கள் வீடியோ வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கண்டித்த ஆசிரியர்
உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த சுமித் சிங் என்ற ஆசிரியரிடம் 16 மற்றும் 18 வயதுடைய 2 மாணவர்கள் பயிற்சி வகுப்பிற்கு வந்துள்ளனர். அதில் ஒரு மாணவர், மாணவி ஒருவரிடம் பேசுவதை ஆசிரியர் கண்டித்துள்ளார்.
இதனால் மாணவனின் சகோதரர் ஆசிரியரிடம் போனில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த விவகாரம் முடிந்து 6 மாதமாகியுள்ளது. அந்த 2 மாணவர்களும் பயிற்சி முடித்து வெளியேறியுள்ளனர்.
ஆனாலும் ஆசிரியர் மீது மாணவர்களுக்கு ஆத்திரம் இருந்துள்ளது. இந்நிலையில் மாணவர்கள் இருவரும் நேற்று பயிற்சி மையத்திற்கு வந்து, ஆசிரியரை வெளியே அழைத்து வந்துள்ளனர்.
துப்பாக்கியால் சுட்ட மாணவர்கள்
பின்னர் அதில் ஒரு மாணவன் ஆசிரியரை துப்பாக்கியால் சுட்டுள்ளான். மற்ற மாணவன் அதை வீடியோவாக பதிவு செய்துள்ளான்.
இதனையடுத்து அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு அதில் ஒரு மாணவன் பேசியதாவது "6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வருவேன். நான் 40 தோட்டாக்களை உன் உடலில் பாய்ச்ச வேண்டும். இன்னும் 39 மீதம் இருக்கிறது" என்று சினிமா பட பாணியில் அந்த மாணவன் கூறியுள்ளான்.
இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஆசிரியர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அந்த 2 மாணவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.