மீண்டும் தலைவிரித்தாடும் கொரோனா; 2 பேர் பலி - 182 பேர் பாதிப்பு
கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தொற்று
கடந்த சில நாட்களாக இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவி வருகிறது. அந்தவகையில், கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால் கடந்த இரண்டு நாட்களில் 182 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவர் உயிரிழந்துள்ளனர். கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த 59 வயது ஆண் ஒருவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இருவர் பலி
அதேபோல் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 64 வயது ஆண் ஒருவரும் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த இரண்டு நபர்களுமே ஏற்கனவே இதய நோய் உள்ளிட்ட சில உடல்நல பாதிப்புகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் பெரிய அளவில் கொரோனா பரவல் தீவிரமடையவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2019 முதல் 3 ஆண்டுகளுக்கு கொரோனாவின் ஆட்டத்தால் நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்த நிலையில் கொரோனா மீண்டும் பரவி வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.