நைஜீரிய மசூதியில் பயங்கர தாக்குதல் : 18 பேர் பலியான பரிதாபம்
வடக்கு நைஜீரியாவில் உள்ள மசூதியில் மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் கிராம மக்கள் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நைஜீரியாவில் இன வன்முறை, நீர் மற்றும் நிலத்தை பயன்படுத்துவதற்கான மோதல் பல சகாப்தங்களாக இருந்து வருகிறது. இது தொடர்பாக நீடிக்கும் மோதலில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை நூற்றுக்கணக்கான பேர் இறந்துள்ளனர். இந்த மோதலில் சிக்கிய புலானி மக்களில் சிலர் உள்ளூர் விவசாய சமூகங்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி தாக்குதலில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே நைஜீரியா மஷேகு பகுதி மசாகுகா கிராமத்தில் உள்ள மசூதியில் மக்கள் பலர் நேற்று அதிகாலை தொழுகையில் ஈடுபட்டனர். அப்போது மசூதியை சுற்றி வளைத்த மர்மநபர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் சுமார் 18 கிராம மக்கள் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலுக்கு பிறகு நைஜீரியாவின் வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் பதற்றமான சூழ்நிலை நீடிக்கிறது. இந்நிலையில் மாஷேகு பகுதி மிகவும் கடினமான நிலப்பரப்பாக இருப்பதால், அங்கு பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுவது போலீசாருக்கு பெரும் சவாலாக உள்ளதாக அம்மாநில போலீஸ் கமிஷனர் மாண்டே குரியாஸ் தெரிவித்துள்ளார்.