அரசு மருத்துவமனையில் ஒரே இரவில் 18 பேர் பலி - அதிர்ச்சி பின்னணி!
அரசு மருத்துவமனையில் ஒரே இரவில் 18 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கவனக்குறைவு
மும்பை, தானே கல்வாவில் சத்ரபதி சிவாஜி அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு டாக்டர்களின் கவனக்குறைவால் 5 நோயாளிகள் உயிரிழந்தனர். அதனை உள்ளூர் எம்.எல்.ஏ ஜிதேந்திர அவாத் நேரில் சென்று பார்வையிட்டு டாக்டர்களை கண்டித்தார்.
அதனைத் தொடர்ந்து, தற்போது மேலும், 18 நோயாளிகள் டாக்டர்களின் கவனக்குறைவால் உயிரிழந்துவிட்டனர். அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த 15 பேரும், பொது வார்டில் சேர்க்கப்பட்டிருந்த 3 பேரும் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனர்.
18 பேர் பலி
இதில் பெரும்பாலானவர்கள் முதியவர்கள். டாக்டர்கள் சிகிச்சையளிக்கவும் வரவில்லை, மருந்தும் கொடுப்பதில்லை என்று நோயாளிகளின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, "சுகாதாரத் துறை ஆணையர் தலைமையில் மாவட்ட ஆட்சியர், நகராட்சித் தலைவர், சுகாதாரத் துறை இயக்குநர் ஆகியோர் அடங்கிய விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளார்.
இந்தக் குழு விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.
மாநில சுகாதார அமைச்சர் சாவந்த் கூறுகையில், "மருத்துவமனையின் டீன் இரண்டு நாட்களில் நடந்த சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.