செம்மொழியாக தமிழ்மொழி அங்கீகரிக்கப்பட்ட நாள் இன்று..!
நாடாளுமன்றத்தில் செம்மொழியாக தமிழ்மொழி அங்கீகரிக்கப்பட்ட நாள் ஜூன் 6 ஆம் தேதி ஆகும். இன்றோடு அந்த அறிவிப்பு வெளியாகி 17 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
இந்தியாவின் பழமையான மொழி என சமஸ்கிருதத்துக்கு பல சலுகைகள் வழங்கப்பட்டாலும், செம்மொழி என இந்திய அரசால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட முதல் இந்திய மொழி தமிழ் என்பது குறிப்பிடத்தக்கது. 2004 - ம் ஆண்டில் ஜூன் 6 ஆம் தேதி அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டமொன்றின்போது அறிவித்தார்.
பின்னர் 2004 ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி இந்த அறிவிப்பு அரசாணையாக வெளிவந்தது. இதனைத்தொடர்ந்து இந்திய அரசின் செம்மொழி தமிழாய்வு நிறுவனம் 2008 ஆம் ஆண்டு முதல் சென்னையில் செயல்பட தொடங்கியது.
இதனையடுத்து 2010 ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை கோவையில் செம்மொழி மாநாட்டை அப்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி நடத்தினார்.
அதன்பின் அடுத்தடுத்த ஆண்டுகளில் சம்ஸ்கிருதம்,கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒடியா மொழிகளும் இந்தியாவின் செம்மொழிகளாக அறிவிக்கப்பட்டன.