சுனாமி தாக்கி இன்றோடு 17 ஆண்டுகள் நிறைவு - ஆறாத மக்களின் சோகம்
தமிழக கடலோரப் பகுதிகளை சுனாமி அலைகள் தாக்கியதின் 17 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி முந்தைய நாள் கிறிஸ்துமஸ் கொண்டாடி விட்டு மறுநாள் காலை அந்த மிகப்பெரிய விபரீதம் நடக்கும் என கடலோர மக்கள் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவு அருகே ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக எழுந்த சுனாமி ஆழிப்பேரலைகள் தமிழகத்தின் கடற்கரையை பதம் பார்த்து பிணக்காடாக்கியது.
கடல் அலைகள் 30 மீட்டர் உயரத்துக்கு உருவாகி 14 நாடுகளில் கடலோர பகுதிகளுக்குள் புகுந்தது.திடீரென தண்ணீர் ஊருக்குள் புகுந்ததால் நிலைகுலைந்துபோன மக்களுக்கு, “என்னவோ உலகமே அழிகிறதோ?” என்று எண்ணும் அளவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. இந்தியா, இந்தோனேசியா, இலங்கை, மாலத்தீவு, தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட 14 நாடுகளில் கரையோரம் வசித்த மக்களை வாரி சுருட்டியது. இந்த எதிர்பாராத பேரிடரில் மொத்தம் 2 லட்சத்து 29 ஆயிரத்து 866 பேர் பலியானார்கள். 43 ஆயிரத்து 786 பேர் காணாமல் போனார்கள்.
தமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடலோர மாவட்டங்களில் சுனாமியின் கோர தாண்டவம் அரங்கேறியது. மொத்தம் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். நாகப்பட்டினத்தில் மட்டுமே 6 ஆயிரத்திற்கு மேல் மாண்டுபோனார்கள். கடலூரில் 610 பேரும், சென்னையில் 206 பேரும் இறந்தனர். வயது வித்தியாசம் இன்றி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உயிர் நீத்தனர். அன்று தங்கள் வீட்டு உறுப்பினர்களை இழந்தவர்களின் கதறல் இன்றளவு 16 ஆண்டுகளை கடந்தும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு தமிழர்களின் மனதிலும் ஏற்பட்ட காயத்திற்கான மருந்து காலத்திடம் மட்டுமே இருக்கிறது என்றாலும், அந்த காலத்தாலும் அழிக்க முடியாத வடுவை சுனாமி ஏற்படுத்தி சென்றுவிட்டது. இனியும் இதுபோன்ற கோர நிகழ்வு ஏற்பட வேண்டாம் என நினைக்கும் அளவு அதன் பாதிப்பு இருந்தது.