செல்ஃபோனில் அதிக நேரம் செலவிட்டதால் கண்டிப்பு: மணமுடைந்த சிறுமி தூக்கிட்டு தற்கொலை
செல்ஃபோனில் அதிக நேரம் செலவிட்டு வந்ததை தாய் கண்டித்ததால் 17 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், ஒத்தக்கால் மண்டபம் பகுதியை சேர்ந்த கல்பனா என்ற 34 வயது கூலி வேலை செய்யும் பெண்ணுக்கு 17 வயதில் ஒரு மகள் இருக்கிறார்.
தந்தை இல்லாமல் தாயின் கடின உழைப்பினால் வாழ்ந்து வருகிறது இந்த குடும்பம்.
இந்நிலையில் அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வரும் கல்பனாவின் மகள் கடந்த சில தினங்களாக செல்ஃபோனில் அதிக நேரம் செலவிட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து தாய் கல்பனா மகளை திட்டி கண்டித்ததால் மனமுடைந்த மாணவி நேற்று பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.
தாய் கல்பனா வேலைக்கு சென்றுவிடவே வீட்டில் தனிமையில் இருந்த மாணவி வீட்டின் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வேலை முடித்துவிட்டு மாலையில் வீடு திரும்பிய கல்பனா மகள் தூக்கில் தொங்கியப்படி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செட்டிபாளையம் போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.