கழுத்தறுக்கப்பட்டு பையில் அடைத்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சிறுவன் - போலீசார் தீவிர விசாரணை
கழுத்தறுக்கப்பட்டு 17 வயது சிறுவனின் உடல் பையில் அடைக்கப்பட்ட நிலையில் கண்டெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் அடையாளம் தெரியாத சடலம் குறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், வடமேற்கு டெல்லியின் மங்கோல்புரி பகுதியில் 17 வயது சிறுவனின் உடல் பையில் அடைக்கப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை காலை கண்டுபிடிக்கப்பட்டதாகவும்,
வியாழன் இரவு முதல் சிறுவன் ரோகினி பகுதியில் இருந்து காணாமல் போனதாகவும் தெரிவித்தனர்.
மேலும், ஒய்-பிளாக் மங்கோல்புரிக்கு எதிரே உள்ள பீர் பாபா மஜார், மெயின் ரோடை அடைந்தபோது, தொண்டையில் வெட்டு காயங்களுடன் அடையாளம் தெரியாத உடல் ஊதா நிற பயணப் பையில் அடைக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்ததாக காவல்துறை துணை ஆணையர் சமீர் சர்மா தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து காணாமல் போன நபரின் பதிவுகளை சரிபார்க்க அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் மாவட்டங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில், போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கண்டறியப்பட்ட சடலம் ரோகினி செக்டார்-1 இல் வசித்து வந்த 17 வயது சிறுவனுடையது என தெரியவந்துள்ளது.
சிறுவன் காணாமல் போனதாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், வெள்ளிக்கிழமையன்று தெற்கு ரோகினி காவல் நிலையத்தில் ஐபிசி பிரிவு 363இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.