பாதாள அறையில் அடைத்து வைக்கப்பட்ட ஆபாச நடன அழகிகள் - மும்பையில் பரபரப்பு

Andheribar 17womenrescued
By Petchi Avudaiappan Dec 14, 2021 12:16 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

மும்பையில் உள்ள  பாரின் பாதாள அறையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த 17 நடன அழகிகளை போலீசார் மீட்டுள்ளனர்.

மகாராஷ்ட்ராவில்  கடந்த 2005 ஆம் ஆண்டு பெண்கள் ஆபாச உடைகளுடன் மதுபான விடுதிகளில் நடனமாடும் 'டான்ஸ் பார்களுக்கு' தடை விதிக்கப்பட்டது. எனினும் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக டான்ஸ் பார்கள் நடந்து வருகின்றன.

இதில் அந்தேரி பகுதியில் உள்ள தீபா என்ற பாரில் சட்டவிரோதமாக பல செயல்கள் நடந்து வருவதாக சமூக குற்றத்தடுப்பு பிரிவு போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து கடந்த சனிக்கிழமை இரவு 11 மணியளவில் அந்த பாரில் போலீசார் சோதனை நடத்தினர்.

அப்போது பாரில் பெண்கள் யாரும் இல்லை. நடன அழகிகள் குறித்து போலீசார் அங்குள்ள ஊழியர்களிடம் பல மணி நேரம் விசாரித்தனர். அவர்களும் பாரில் நடன அழகிகள் கிடையாது என விடாப்பிடியாக கூறினர். இந்தநிலையில் நேற்று அதிகாலை சமூக குற்றத்தடுப்பு பிரிவு துணை கமிஷனர் அங்கு சென்றார். பாரில் மீண்டும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது பாரில் ஒரு அறையில் சந்தேகத்துக்கு இடமாக பொிய அளவில் கண்ணாடி வைக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து போலீசார் அந்த கண்ணாடியை உடைத்து பார்த்தனர். அப்போது கண்ணாடிக்கு பின்புறம் சிறிய கதவு இருந்தது. மேலும் அந்த கதவை திறந்த போது உள்ளே குறுகிய பாதாள அறை இருந்ததை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

அந்த பாதாள அறைக்குள் அறைகுறை ஆடைகளுடன் நடன அழகிகள் அடைக்கப்பட்டு இருந்தனர். மேலும் அவர்கள் நீண்ட நேரம் அறைக்குள்ளே இருக்கும் வகையில், அழகிகளுக்கு தேவையான குடிநீர், குளிர்பானம், உணவு வகைகளும் உள்ளே இருந்தது. இதையடுத்து போலீசார் பாதாள அறையில் இருந்த 17 நடன அழகிகளையும் மீட்ட நிலையில், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து பார் மேலாளர், காசாளர், 3 ஊழியர்களை கைது செய்து பாருக்கும் சீல் வைத்தனர்.