உணவில் மயக்கமருந்து கலந்துகொடுத்து 17 மாணவிகள் பாலியல் துன்புறுத்தல்
உத்தரப்பிரதேசத்தில் 10ம் வகுப்பு மாணவிகள் 17 பேருக்கு உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்த பள்ளியின் நிர்வாக வேலாளர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்திய விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் முசாஃபர்நகரின் மீரட் நகர் அருகே செயல்பட்டு வரும் தனியார் சிபிஎஸ்இ பள்ளியின் மேலாளர் அந்த பள்ளியில் படித்து வரும் மாணவிகள் 17 பேரை செய்முறை வகுப்புகளுக்காக கடந்த நவம்பர் 20ம் தேதியன்று பள்ளிக்கு வரவழைத்துள்ளார்.
ஆண் மாணவர்களை வரவழைக்காமல் மாணவிகளை மட்டும் வரவழைத்த பள்ளியின் மேலாளர் அந்த மாணவிகளை செய்முறை வகுப்புகளுக்காக வேறு ஒரு பள்ளிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.அங்கு சென்ற போது மாணவிகளுக்கு கிச்சடி உணவு வழங்கப்பட்டுள்ளது. அந்த உணவில் மயக்க மருந்து கலந்திருந்ததால் அதனை சாப்பிட்ட மாணவிகள் மயக்கம் அடைந்திருக்கின்றனர்.
இதனையடுத்து மாணவிகள் பள்ளியின் மேலாளரும், அவர்கள் சென்ற பள்ளியின் மேலாளர் இருவரும் சேர்ந்து மயங்கிக் கிடந்த மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியிருக்கின்றனர். மேலும் மயக்கம் தெளிந்த மாணவிகளிடம் இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது மீறினால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டி மறுநாள் காலையில் தான் மாணவிகளை வீடுகளுக்கு அனுப்பியுள்ளனர்.
ஒரு சில மாணவிகள் மிரட்டலுக்கு பயந்த நிலையில் சில மாணவிகள் தங்களின் பெற்றோரிடம் நடந்தது குறித்து தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவிகள் அனைவருமே மிகவும் ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்ற நிலையில் சில மாணவிகளின் பெற்றோர், கிராமத் தலைவருடன் சென்று காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
ஆனால் பள்ளிகளின் செல்வாக்கினால் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கிராமத் தலைவர் மாவட்ட எஸ்.பிக்கு வாட்ஸ் அப் மூலம் புகார் அளித்திருக்கிறார். மேலும் சில பெற்றோர் பாஜக எம்.எல்.ஏ உத்வலை சந்தித்து முறையிட்ட பின்னரே இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த பள்ளி நிர்வாகிகள் மீது போக்ஸோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இருவரும் தலைமறைவாகினர். அதில் ஒருவர் தற்போது கைதாகியுள்ளார். மேலும் வழக்கை சரிவர விசாரிக்காமல் காலதாமதப்படுத்தி இழுத்தடித்த சம்பந்தப்பட்ட காவல்நிலைய ஆய்வாளர் காவல் தலைமையகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக மாவட்ட எஸ்.பி அர்பித் விஜய்வர்கையா தெரிவித்தார்.
இந்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.