16 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு - சர்ச் பாதிரியார் மற்றும் அவரது மனைவி கைது
16 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து வீடியோவாக எடுத்து மிரட்டிய புகாரில் பாதிரியாரும் அவரின் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குஜராத் மாநிலம் தபி மாவட்டம் சோன்காத் தாலுகாவில் உள்ள கோக்னி கிராமம் ஒன்றைச் சேர்ந்த 16 வயது சிறுமி,
தனது பெற்றோருடன் அங்குள்ள தேவாலயத்தில் நடைபெறும் பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொள்ளவதற்காக அடிக்கடி சென்று வந்துள்ளார்.
அந்த சிறுமியுடன் பழக்கம் ஏற்படுத்திக் கொண்ட 39 வயதாகும் பாதிரியார் பலிராம், பின்னர் அச்சிறுமியை தனியாக வரவழைத்து அவரை பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறார்.
இந்த கொடூர சம்பவத்தை பாதிரியாரின் மனைவி அனிதா தனது மொபைல் போனில் வீடியோவாகவும், புகைப்படங்களும் எடுத்து வைத்து இருக்கிறார்.
சிறுமி தனது பெற்றோருடன் சேர்ந்து பாதிரியார் பலிராமுக்கு சொந்தமான விவசாயப் பண்ணையில் கூலி வேலை பார்த்து வருகிறார்.
பலாத்கார சம்பவத்தின் போது அனிதா எடுத்த வீடியோவை வைத்து பாதிரியார், அவரின் மனைவி என இருவரும் அச்சிறுமியை தொடர்ந்து மிரட்டி வந்ததாகவும்,
மேற்கண்ட வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றி விடுவதாகவும் மிரட்டி வந்ததால் இது குறித்து சிறுமி யாரிடமும் புகார் கொடுக்காமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில் பாதிரியாரின் மிரட்டல் அதிகரித்ததால், கடந்த வாரம் இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் சிறுமி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து உடனடியாக பாதிரியாரும், அவரின் மனைவி அனிதாவும் போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க 4 நாட்கள் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
16 வயது சிறுமியை பாதிரியார் பலாத்காரம் செய்ததுடன், இந்த கொடூர சம்பவத்துக்கு உடந்தையாக அவரின் மனைவி வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.