“கல்யாணத்துக்கு போனது ஒரு குத்தமா” - மின்னல் தாக்கி 16 பேர் பலியான பரிதாபம்
வங்கதேசத்தில் திருமண நிகழ்வில் மின்னல் தாக்கி 16 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தின் தென்கிழக்கு மாவட்டமான காக்ஸ் பஜாரில் கடந்த ஒரு வாரமாக சூறாவளிக் காற்றுடன் பெய்துவரும் கனமழையால் இதுவரை 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர்.
இதனிடையே மேற்கு மாவட்டமான சாபானவாப்கஞ்சில் நேற்று ஒரு திருமண நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆற்றங்கரையோரமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வுக்கு வந்தவர்கள் பலத்த மழைக் காரணமாக அங்குள்ள இடம் ஒன்றில் தஞ்சம் புகுந்துள்ளனர். அப்போது திடீரென அந்த இடத்தை மின்னல் தாக்கியதால் அடுத்த சில நொடிகளில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் இந்த சம்பவத்தில் மாப்பிள்ளை படுகாயம் அடைந்தார். அதேசமயம் மணப்பெண் அந்த இடத்தில் இல்லாததால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதனிடையே தெற்கு ஆசியாவில் ஆண்டுதோறும் மின்னல் தாக்கில் நூற்றுக்கு மேற்பட்டோர் இறந்துவருகின்றனர்.
காடுகளை அழிப்பதே இதுபோன்ற மரணங்களுக்கு காரணம் என நிபுணர்களை கூறியதை அடுத்து வங்கதேசம் ஆயிரக்கணக்கான பனை மரங்களை நட்டிருக்கும் நிலையில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.