16 நாட்களாக இருட்டு ரூமில் அடைத்து சித்ரவதை! இந்தோனேசிய சிறையில் கதறும் 6 இந்தியர்கள்!
இந்தோனேசிய சிறையில் வாழ்வாதாரத்தை இழந்து 16 நாட்களாக இருட்டு அறையில் அடைத்து வைத்து சித்ரவதை அனுபவிக்கும் 6 இந்தியர்களையும் தமிழக முதல்வர் மீட்க வேண்டும் என அவர்கள் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா நயினார்கோவில் ஒன்றியம் அக்ரமேசி கிராமத்தை சேர்ந்த கவின் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
சென்னையில் உள்ள செனர்ச்சி மெரிடைம் ரெக்ரூட்மென்ட் பிரைவேட் லிமிடெட் என்ற கம்பெனி மூலம், கடந்த 10 ஆண்டுகளாக கப்பலில் ஆயிலராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு பணிக்கு சென்றுள்ளார் கவின். இந்த நிலையில், தற்போது சொந்த ஊர் திரும்புவதற்காக கடந்த ஜூன் 8-ம் தேதி கவின் உட்பட 6 இந்தியர்கள் இந்தோனேசியாவில் இறங்கியுள்ளனர்.
பின்னர் இந்தோனேசியா ஏர்போர்ட்டுக்கு சென்ற 6 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டு, பாட்டாம் என்ற இடத்தில் சிறை பிடித்து வைத்துள்ளனர்.
ஏர்போர்ட்டில் எவ்வித காரணமும் தெரிவிக்காமல் இவர்கள் 6 பேரையும் இந்தோனேசியா அரசு கடந்த 16 நாட்களாக சிறை பிடித்து வைத்துள்ளது.
வாழ்வாதாரத்தை இழந்து இந்தோனேசிய சிறையில் கடந்த 16 நாட்களாக குடிநீர், உணவு இன்றி இருட்டு ரூமில் சிறைபிடித்து அடைத்து வைத்துள்ளனர்.
இதனால் தமிழக முதல்வர் ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவினின் பெற்றோர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.